
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரை பணி நிறுத்துவது என்று இன்று சனிக்கிழமை கூடிய பேரவை முடிவு செய்துள்ளது.
பரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பணி நிறுத்தம் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
பொருளியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளராக மிக அண்மையிலேயே தெரிவு செய்யப்பட்டிருந்தார் முத்துக் கிருஷ்ணா சர்வானந்தன். அவர் விரிவுரையாளராக வருவதைத் தடுப்பதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் நடந்துவந்தன என்று எழுப்பப்பட்ட சர்ச்சைக்குப் பின்னரான சூழ்நிலைகளிலேயே சர்வானந்தன் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் அவர் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாளை முன்கூட்டியே தெரியப்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அவரது மின்அஞ்சலில் இருந்து வினாத்தாள் மாணவர்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டமையை அவரால் மறுக்க முடியாத நிலையில் அவர் தவறிழைத்தமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரைப் பணி நிறுத்தம் செய்வதற்குப் பேரவை முடிவெடுத்திருப்பதாக அறியவந்தது.