பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதன அதிகரிப்பு சம்பந்தமாக வேதன நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் கூட உள்ளது.
ஏற்கனவே கடந்த 8ஆம் திகதி கூடிய வேதன நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 900 ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து ஆயிரம் ரூபாய் நாளாந்தம் வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அன்றைய தினம் அறிவித்திருந்தார்.
அதே நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று வரையில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக இன்றைய தினம் மதியம் வேதன நிர்ணய சபை ஒன்று கூட உள்ளது.
இதன் போது மீண்டும் 1000 ரூபாய் அதிகரிப்பு தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது