இனி அமைதி மட்டுமே : வனிதா முடிவு

0
8

பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தது முதல் இப்போது வரை சமூகவலைதளங்களில் பல விமர்சனங்கள், கேலி, கிண்டல்களை எதிர்கொண்டு, எல்லாவற்றுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வனிதா. இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் வரை ஏறி, இறங்கி விட்டார். கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் உடன் சரிக்கு சமமாக மல்லுக்கட்டிவிட்டார். ஒருக்கட்டத்தில் சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் டுவிட்டரை விட்டு வெளியேறி விட்டார்.

இந்நிலையில் சம்பந்தமின்றி தன்னை விமர்சித்த சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர் போலீசார். கஸ்தூரி முயற்சியால் அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

இந்நிலையில் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கை : என் நலம் விரும்பிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு பேசி வந்த சூர்யா தேவி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தேன். சட்டப்படி அவரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாக இருப்பதாலோ, குழந்தைகள் உள்ளன என்பதற்காக குற்றவாளியான ஒருவரை தண்டிக்காமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம்.

சூர்யா தேவி, எந்த காரணமும் இல்லாமல் மனிதநேயமின்றி என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி மனதால் துன்புறுத்தி வந்தார். அவரின் குழந்தைகளின் நலனுக்காக அவரை ரிமாண்ட் செய்ய விரும்பவில்லை. அதனால் அவரின் ஜாமினையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இதனால் அவர் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். இனி இது போன்று அவர் ஈடுபடக் கூடாது.

இதுப்பற்றி மேற்கொண்டு நான் எந்த பேட்டியும், விளக்கமும் கொடுத்து எனது நேரத்தை வீணடிக்க போவது கிடையாது. விவாகரத்து தொடர்பான பிரச்னையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம், புகழ் மற்றும் மீடியாக்களின் பப்ளிசிட்டியை சிலர் தேட முயற்சிக்கிறார்கள். பரவாயில்லை, இந்த பிரச்னைகளால் நான் மிகவும் சோர்வாகிவிட்டேன். யாரும், யாருடனும் வாழலாம். பீட்டர் பாலும், நானும் அதுப்பற்றி கவலைப்பட போவது கிடையாது. எங்களின் உண்மையை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. கடவுள் ஒருவருக்கு மட்டுமே பயப்படுவோம்.

குறைகுடம் தான் சத்தம் எழுப்பும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள், நாங்கள் அமைதியாக இருப்போம். அவர்கள் பேசுவதை காதில் வாங்க போவதில்லை. எங்களை புரிந்து கொண்டு எங்கள் மீது அக்கறை காட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு வனிதா தெரிவித்துள்ளார்.