மாவை வெற்றிப் பெற வேண்டியது அரசியல் ரீதியாக மிகவும் அவசியமானது! சீ.வி.கே.சிவஞானம்

0
6

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர். எனவே, கட்சித் தலைவர் என்ற வகையில் அவர் வெற்றி பெற வேண்டியது அரசியல் ரீதியாக அவசியமானது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2013ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நான்கு கட்சிகள் கூட்டமைப்பாக பெரும் வெற்றி கண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆனால், மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடியும்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி முழுமையாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. மேலும் நீதியரசர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் போன்றோர் தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டமைப்புக்கு எதிரான நிலையில் உள்ளனர்.

டெலோ அமைப்பும் இரண்டாகப் பிரிந்து ஒரு பிரிவினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள, டெலோ தலைமையினர் கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பிரிந்து நின்று உதிரிகளாக தேர்தலில் போட்டியிடுவதால் எமது பிரதிநிதித்துவப் பலம் சிதைவடையவே செய்யும்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கக்கூடிய தேசியப்பட்டியல் ஆசனம் தென் பகுதிக்குச் செல்லக் கூடிய அபாயம் தெளிவாகிறது. மேலும் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகளும் பறிபோகும்.

எனவே, எமது மக்கள் சிரமம் பாராது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையாக வாக்களிப்பதன் மூலம் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுது மட்டுமன்றி தேசியப்பட்டியலில் இரண்டு பேருக்கு கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும், இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரே யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர். எனவே, கட்சித் தலைவர் என்ற வகையில் அவர் வெற்றி பெற வேண்டியது அரசியல் ரீதியாக அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.