புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

0
2

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு-கிழக்கில் ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான’ மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.

தமிழ் மக்களுக்கு உறுதியான ஒரு நேர்மையான அரசியல் தலைமையும், அரசியல் வெற்றிடமும் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ அதனுடைய தலைவராக இருக்கக் கூடிய விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் அதிகளவான ஆசனங்களை பெற்றுக் கொள்ளும்.

மக்கள் எங்களுக்கு வழங்குகின்ற ஆதரவின் ஊடாக நிச்சயமாக நாங்கள் இந்த தேர்தலில் அதிகளவான ஆசனங்களை பெற்று இத்தேர்தலுக்கு பிற்பாடு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

தமிழ் மக்கள் நிச்சயமாக ஆணையை எமக்கும் வழங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.