குடிநீரில் கலக்கும் வைத்தியசாலைக் கழிவு நீர்…

0
12

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீரானது வெளியே விடப்படுவதால் குடிநீர் நிலைகளை மாசுபடுத்துவதுடன் துர்நாற்றமும் ஏற்படுகிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை கழிவு நீரானது வெளியே ஆற்றுக்குள் விடப்பட்டுவருகிறது. இந் நீரானது ஆற்றினூடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது.

இக் குளத்திலிருந்தே மாவட்டத்துக்கான நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இரசாயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே அவற்றை சுத்திகரிக்கின்ற வசதிகள் கிளிநொச்சி குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படுகிறதா? அங்கிருந்து குழாய் வழியாக விநியோகிக்கப்படும் நீரை தாம் குடிநீராக பயன்படுத்தலாமா என்பதனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவிக்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு தடவை முறைப்பாடு செய்தும் இதுவரை அதனை நிவர்த்தி செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் நிர்வாகத்தினால் எடுக்கப்படவில்லை’ எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் தொடர்புகொண்டு வினவிய போது…

வைத்தியசாலையின் நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இயங்கவில்லை. எனவே இது தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கைக்கு மாகாண பணிப்பாளருக்கு அறிவித்திருகின்றோம். தற்போது கூறுவிலை கோரல் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.