சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா?

0
7

இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இந்த ஆதரவுத் தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குச் சாதகமாக அமையும்-

-அ.நிக்ஸன்-

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றில் அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்த காலம் சென்றுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் அரசியல்தான் கதியென்ற நிலைப்பாட்டில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இயங்குவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களின்போது மாத்திரம் தமிழ்த்தேசியம் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில், ஒரு கட்சி, இரு தேசம் ஒரு நாடென்கிறது. மற்றைய கட்சி ஒன்று, ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி இருப்பதாகக் கூறுகிறது.

வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு என்று கூறி வேறு சில கட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றன. இன்னுமொரு கட்சி. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிறது.

இதனை அவதானித்த அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன், அனைத்துக் கட்சிகளின் இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கட்டுரை ஒன்றை எழுதி அதற்குத் தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டான்.

அந்தக் கட்டுரையை வாசித்த அந்த மாணவனுடைய விரிவுரையாளர், தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டமைக்கான காரணத்தைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மாணவன், இரு தேசம் ஒரு நாடென்று பேசுகிற கட்சியும் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியம் என்று கூறுகிறது. ஓற்றையாட்சிக்குள் சமஸ்டி இருப்பதாகச் சொல்லித் திரியும் கட்சியும் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியம் என்கிறது.

வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்த அரசியல் தீர்வுதான் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை என்று வேறுகட்சிகளும் மார்தட்டுகின்றன. அதனால்தான் அனைத்துக் கட்சிகளினதும் இந்தக் கருத்துக்களைத் தொகுத்து எழுதிவிட்டுத் தமிழ்த்தேசியம் என்று தலைப்பிட்டேன் எனக் கொஞ்சம் அச்சத்தோடு சொன்னான் அந்த மாணவன்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முன்பு கூறிய கட்சி ஒன்று தற்போது அந்த வாசகத்தையே கைவிட்டுள்ளது. அதனால் அந்தக் கட்சியின் கருத்தைத் தனது கட்டுரைக்குள் சேர்க்க முடியவில்லை என்றும் மாணவன் சுட்டிக்காட்டினான்.

Eluka-Thamil-Batticaloa-27

மாணவன் தனது விரிவுரையாரிடம் மீண்டுமொரு கேள்வியைக் கேட்டான், உண்மையில் தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று? விரிவுரையாளர் கொஞ்ச நேரம் அதிர்ச்சியாக மாணவனைப் பார்த்தார். விரிவுரையாளர் வழங்கிய பதிலும் மேற்படி கட்சிகளின் கருத்துக்களைப் போன்றுதான் இருந்தன.

இதனால் திருப்பதியடையாத மாணவன், விரிவுரையாளரை நோக்கி என்ன சேர் நீங்களும் அந்தக் கட்சிகள் போன்றல்லவா சொல்கிறீர்கள் என்றான்.. விரிவுரையாளருக்கு மேற்கொண்டு என்ன பதில் சொல்வதென்றெ தெரியவில்லை—

இதுதான் பிரச்சினை— தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்பது தொடர்பாக மக்களுக்கும் சரியான விளக்கம் இல்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் உரிய விளக்கம் தெரியாது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியாது என்பதுதான் தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடு எழுந்தமைக்கு மூல காரணம்.

குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற அரசியல் என்பது வெறுமனே ஏமாற்று. ஆகவே அந்த நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று சிங்கள. தமிழச் சமூகங்கள் ஒன்றினைந்து செய்யும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் மூலமே ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் திர்வைக் காணமுடியும்.

இதற்காகச் சாதி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கடந்து தமிழ் மக்களாக ஒன்று திரள வேண்டும். அதுதான் தமிழ்த்தேசியம். இந்தத் தமிழ்த்தேசியம் என்பது தமிழ் ஈழம் அமைப்பது அல்ல. தேசம் என்பது வேறு நாடு என்பது வேறு என்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். தேசம் என்பது மக்கள திரள் என்றுதான் அவர் விளக்குகின்றார்.

ஆகவே தேசமாக மக்கள் திரண்டு தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவுவதற்கான ஏற்பாட்டைச் செய்யப் போவது யார்? சமகால உலக அரசியல். பொருளாதார ஒழுங்கின் பிரகாரம் மக்கள் கூட்டுச் சக்தியாகத் தமது அரசியல் விடுதலையை ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வலியுறுத்தும் போது அது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

ஆகவே இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு இந்த மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இவ்வாறான வெவ்வேறுபட்ட ஆதரவுத்தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கே சாதகமாக அமையும்.

அதாவது சாதி, மதம், பிரதேசம் போன்றவற்றைக் கடந்து தமிழ் மக்களாக ஒன்று திரள்வதை இந்த வெவ்வேறுபட்ட ஆதரவுத் தளங்கள் தடுக்கும் சிந்திக்க வேண்டிய விடயம் இதுதான். சிந்திக்க வேண்டியது யார் பொறுப்பு என்பதே இப்போதைய கேள்வி.