வலிசுமந்த நாட்களும் கொரோனாவும்

0
10

ஒவ்வொரு ஆணடும் மே மாதம் என்பது வலிசுமந்த நாட்களின் நினைவுகளில் எமது மனம் அல்லாடும். இன்று நினைத்தாலும் நேற்றுப்போல் இருக்கிறது. வீதிகளை நிறைத்து உலகப் பரப்பெங்கும் நாம் யாகம் நடாத்திய நாட்கள். ஆனால் இடையே தான் 11 ஆண்டுகள் உருண்டோடி விட்டனவே.

எமது பயணம், எமது இலட்சியம், எம் மக்களின் நீதி வேண்டிய போராட்டம், எல்லாம் பாதி வழியில் நிற்கின்றன. எமது பாதுகாப்பு, எமது இருப்பு, எல்லாம் மேலும் கேள்விக்குறிக்குள்ளாகி நிற்கிறன. எமது தடங்களில் ஒருமுறை நடந்து தான் பார்ப்போமே!

இம்மாதம் முழுமையாக அதன் பல பக்கங்களை, ஒருமுறை இரைமீட்டு, எம்மை நாமே உரசிப்பார்க்க வருகிறேன். தயாராகுங்கள். ஏன் தாயகத்தைப் பற்றி அதிகம் நான் சமீபகாலமாக எழுதவில்லை என உறவுகள் கேட்டீர்கள்.

இன்றைய எமது நிலையும், நாம் அனுமதிக்கும் சிதைவுகளும், பெருவலி தருகின்றன. எழுத முனைந்தால், முடியாமல் போய்விடுகிறது. ஆனால் சில பொறிகள் சமீப நாட்களாக எழுதத் தூண்டியுள்ளன. ஒரு சமூகத்தின் அனைத்துப் பக்கங்களின் பார்வையாக, வலம்வர எனது உடல்நிலையும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன்.

இருக்க சமிப வாரங்களாக, நிறையவே கொரோனா பற்றி எழுதியிருக்கிறேன். ஏன் இந்த அவதாரம் எனச் சிலர் கேட்டார்கள். தலைமை சொன்ன ஒரு விடயம் ஆழமாக பதிந்துவிட்டது. அதன் விளைவு தான் இவ் அவதாரம்.

என்னவென்று அறிய ஆவலா? “நான் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று கேட்பேன். அதற்கு பெரும்பாலும் அவர்கள் சொக்கிலேட் கொண்டு வந்திருக்கிறம். சேட் கொண்டு வந்திருக்கிறம் எண்டு தான் சொல்லுகிறார்கள்”.

“என்ன புதிய அறிவைக் கற்று அதை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? எதை எமக்கு கற்றுத்தந்துவிட்டுப் போங்கள் என்று கேட்டால் பெரிதும் முழிப்பார்கள்”, என்பார். ஆம் புலத்தில் உள்ள நாம் அனைத்துத் துறைசார் வளர்ச்சியிலும், எம் மக்க்ளுக்கு ஆதார சக்தியாக இருக்க வேண்டியவர்கள்.

முள்ளிவாய்க்காலை நாம் சந்திக்கவேயில்லை. இன்றும் எமது தேசம் உயிர்ப்புடன் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். எமது தலையாக பணி என்னவாக இரந்திருக்கும்? கொரோனா குறித்த அனைத்து விடயங்களையும், தரவுகளையும், வழிகாட்டல்களையும், தாயகத்துடன் முன்கூட்டியே பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் அல்லவா!

உலகில் யாரையும் விட, கொரோனாவை சிறப்பாக, உரிய காலத்தில், சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து, வெற்றிகரமாக கையாண்ட தேசமாக நாம் வெளிப்படுவது அல்லவா? எமது பணியாக இருந்திருக்கும். இதில் முக்கிய பணி மக்களை இது குறித்து முழுமையாக அறிவு மயப்படுத்தி, அவர்களை இதில் முக்கிய பங்காளிகள் ஆக்கி விடுவது தானே!

இப்போது சொல்லுங்கள்! நாம் உயிர்ப்புடன் இருக்கிறோமா? இல்லையா? என்பதைக் கடந்து, அப்பணியின் தொடர்ச்சி தான் என் எழுத்துக்களும் அதற்கான தேடல்களும். ஆனால் இதைச் செய்யும் போது உள்ளார்ந்த ரதியாக ஒரு வலியெடுக்கும் பாருங்கள். அதனாலே கொரோனாவில் கூட பலவிடயங்கள் எழுத, பகிர முடியாமலே போய்விட்டன.

ஆகவே இம்மாதம் முழுமையாக, முள்ளிவாயக்கால்: 11 ஆண்டுகள் ஒருமீள்பார்வை, கோவிட்-19, எதிர்கால சவால்களும், அதற்கான தயாரிப்புகளும், குறித்து பல விடயங்களை விரிவாகப்பார்ப்போம். இப்பயணத்தை மேலும் செழுமைப்படுத்த குறித்த விடயங்களில், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது தான் கருத்துப்பகிர்வு செழுமை பெறும்.

-நேரு குணரட்ணம்