கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதி – விஜயகாந்த்

0
15

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், மருத்துவத்துறையை தேர்வு செய்து மக்கள் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என அரசும், உலக சுகாதார நிறுவனமும்  கூறியும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம்.

மேலும், கொரோனாவில் உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உடல்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.