ஜ.நாவும், ஜெனிவாவும், 11 ஆண்டுகளும், தொடரும் காவடி ஆட்டமும்!

0
7

ஈழத்தமிழரின் பரிகாரநீதி வேண்டிய யாகத்தில், ஜ.நாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை, இன்றைய குழப்ப நிலையில், சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

2009 மே இல், தமிழின அழிப்புடன் ஈழத்தமிழரின் விடுதலைப் போர் முடிவி;ற்கு வருகிறது.
அவ்வாண்டே, ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், தான் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விட்டதாக, அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றி, மகிழ்கின்றது சிறீலங்கா..

அதன் பின் தொடர்ந்து எழுந்த தமிழர் இனப்படுகொலை சம்பந்தமான கூக்குரல்களால், 2010இல், மூவரைக் கொண்ட குழுவை அமைத்துப் போர் குறித்தும், அதன் இறுதி காலங்களில் நடைபெற்ற விடயங்கள் குறித்தும், ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, பணிக்கிறார் ஜ.நா செயலாளர் நாயகம்.

இதனை ஆராய்ந்த குழுவினர், 2011இல், தமது அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். அதில் ஜ.நா மக்களை காக்கின்ற தனது பணியில், மோசமான தவறை இழைத்ததாக குற்றஞ்சாட்டியது மட்டுமன்றி, போர் குற்றங்களும், மனிதாபிமானக் குற்றங்களும், வேறு இழைக்கப்பட்டுள்ளதாக அது அடித்துக் கூறியது.

இதை மையப்படுத்தி, அடுத்த நகர்விற்காக இவ்விடயம் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, ஆம் ஜெனிவாவிற்கு நகர்த்தப்பட்டது.

அங்கு 2012 மார்ச் கூட்டத்தொடரில், சிறீலங்காவிற்கு எதிரான முதலாவது தீர்மானம் 19-2 நிறைவேற்றப்படுகிறது. 24 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 15 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இத்தீர்மானத்தை 11 வாக்களிக்கும் தகுதிபெற்ற நாடுகள் உட்பட, 40 நாடுகள் கூட்டாகக் கொண்டுவந்திருந்தன.

2013 இல் மார்ச் கூட்டத்தொடரில், மீண்டும் ஒரு தீர்மானம் 22-1 நிறைவேற்றப்படுகிறது. இதை 25 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 13 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தீர்மானத்தை 10 வாக்களிக்கும் தகுதிபெற்ற நாடுகள் உட்பட, 32 நாடுகள் கூட்டாகக் கொண்டுவந்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக 2013இல், மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், சிறீலங்காவிற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டார்.

2014 இல் மார்ச் கூட்டத்தொடரில், மீண்டும் ஒரு தீர்மானம் 25-1 நிறைவேற்றப்படுகிறது. இதை 23 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 12 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தனது அறிக்கையை சமர்ப்பித்து பேசிய நவநீதம்பிள்ளை அவர்கள், சிறீலங்கா குறித்து மாற்று வழிகளை ஆராயுமாறு நாடுகளை வேண்டிக்கொள்கிறார்.

2015 சனவரியில், தமக்கு சாதகமான சனாதிபதி அமைந்ததும், பாராளுமன்றத்தேர்தல் வரை மேற்குலகம் அமைதி காக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு சாதகமான அரசு அமைந்ததும், அதனையும் இணைத்து, ஒக்டோபர் கூட்டத்தொடரில் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றுகின்றனர். இதுவே நாம் இன்று பரவலாக பேசிக்கொள்ளும் தீர்மானம் ஆகும். இதில் வலியுறுத்தப்பட்ட முக்கிய நான்கு விடயங்களை, 2016 டிசம்பருக்குள் அமுலாக்குவோம் என்ற உறுதிமொழியை அங்கு வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்குகிறார்.

எனினும் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும் முன்னேற்றம் காணப்படாத நிலையில், 2017 மார்ச் கூட்டத்தொடரில், மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்கி தீர்மானம் 34-1 நிறைவேற்றப்படுகிறது. இதன்போது தனது அறிக்கையை சமாப்பித்துப் பேசிய ஆணையாளர் குசையினும், சிறீலங்கா விடயத்தில் மேலதிக பொறிமுறைகளை ஆராய்ந்து முன்னெடுக்குமாறு நாடுகளை வேண்டுகிறார்.

இதன் தொடர்ச்சியாகவே 2019 மார்ச் கூட்டத்தொடாரில், மேலும் இரண்டு ஆண்டுகாலம் அவகாசம் வழங்கி 40-1 தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதன்போது ஒரு ஆண்டில், அதாவது 2020 மார்ச் 43ஆவது கூட்டத்தொடரில், ஒரு வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையாளர் வேண்டப்படுகிறார். அதனை வியாழன் பெப்பிரவரி 27ஆம் நாள், பின்னேரம் ஆணையாளர் வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அதற்கான தனது பதிலைப் பதிவு செய்யும் போதே, தமக்கு முந்திய அரசு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதில் இருந்து, தாம் விலகிக் கொள்வதாக சிறீலங்கா தற்போதை அரசு அறிவிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெள்ளி 28ஆம் நாள் காலை, இது குறித்த பொது விவாதத்தில் ஏனைய நாடுகள், இது குறித்த தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவுள்ளன. இதில் தமக்கு சார்பாக கருத்துத் தெரிவிக்க நாடுகளைத் திரட்டும் முயற்சியில் சிறீலங்காவுள்ளது.