யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்!

0
5

யாழ். குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறை உருளைக் கிழங்கின் விளைச்சல் அதிகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செம்மண் வளமுள்ள யாழ். வலிகாமம் பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகளால் உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வயாவிளான், சுன்னாகம், இணுவில், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய், இடைக்காடு, கதிரிப்பாய், அச்சுவேலி, பத்தமேனி, நவக்கிரி, சிறுப்பிட்டி, புத்தூர், நீர்வேலி, மானிப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் நிலப் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உருளைக் கிழங்கு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கையின் முக்கிய பொருளாதார சந்தையான தம்புள்ள சந்தையில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு-110 ரூபா முதல் 120 ரூபா வரை விற்பனையாகிய போதும் தற்போது 85 ரூபா முதல் 90 ரூபா வரையே விற்பனையாகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.