சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் ; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

0
13

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கில், அனுபவ வீரரான மொஹமதுல்லா அணியில் இடம்பெறவில்லை.

இறுதியாக 2017ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டாஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரரான யாசிர் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆகியோருக்கு முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொமினுல் ஹக் தலைமையிலான அணியில், டமீம் இக்பால், சய்ப் ஹசன், நஜ்முல் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், மொஹமட் மிதுன், லிடொன் தாஸ், தைஜூல் இஸ்லாம், அபு ஜெயிட், நயீம் ஹசன், எபடொட் ஹொசைன், டஸ்கின் அஹமட், மெயிடி ஹசன், முஷ்டபிசுர் ரஷ்மான், ஹசன் மொஹமத், யாசிர் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அங்கு செல்லும் சிம்பாப்வே அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெறுகின்றது. இப்போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை சிம்பாப்வே அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது..