கெம்பஸ் ரகிங் வாழ்கை …. ஒரு பார்வை

0
77

இப்படி ரகிங் செய்வதில் ஈடுபடுவோரில் அதிகமானோர் கிராம புறங்களில் வாழ்ந்தோராக இருப்பார்கள். பாடசாலை காலங்களில் எலிக் குஞ்சுகள் போல இருந்திருப்பார்கள். பாடசாலையில் எந்தவொரு ஈர்ப்பும் இல்லாமல் யாரும் கண்டு கொள்ளாதோராக வாழ்ந்திருப்பார்கள். ஏனைய மாணவர்களிடையே முதன்மையற்று இருந்திருப்பார்கள். எப்படியோ A/L பாஸ் பண்ணிய பின் மாவட்ட புள்ளி அடிப்படையில் பல்கலைக் கழக அனுமதி கிடைத்துவிடும். அதன் பின்னர் 1st Year முழுவதும் சீனியர்களிடம் திட்டும் அடியும் வாங்கி ரெக்காவார்கள். அமைதியாக சோசல் உதவிகளையும் பெறுவார்கள்.

அதன்பின்தான் எலி பூனையாக அல்ல புலியாக மாறும். இரண்டாவது வருடத்திலிருந்து தான் ஒரு ஹீரோ என நினைத்து மாற முற்படுவார். அதாவது புதியவர்கள் கெம்பசுக்குள் நுழையும் தருணமாக அது இருக்கும். தன்னை ஒரு பலமானவன் என காட்டிக் கொள்ள ஹீரோ ரேஞ்சில் வில்லத்தனங்களை செய்ய முற்படுவார். கடந்த வருடம் தான் பெற்ற அத்தனை கொடுமைகளையும் வட்டியும் முதலுமாக புதிதாக வரும் அப்பாவி மாணவர்கள் மேல் ரெகிங் செய்து பழி தீர்ப்பார்.

பாடசாலை காலங்களில் கண்டே கொள்ளப்படாத இவர்கள் இங்கே உயர்வாக தம்மை ஆக்கிக் கொள்ள இந்த ரெகிங்கை செய்து ஆக்கிக் கொள்வார்கள். திருப்தியடைவார்கள். யாரோ இவர்களுக்கு செய்த ரெகிங்கை இன்னொருவருக்கு செய்து மகிழ்வார்கள். இது சரியான முறையென நினைத்துக் கொள்வார்கள்.

வீதியில் யாரோ ஒருவனிடம் அடிவாங்கிவிட்டு வீட்டுக்கு வந்து அந்தக் கோபத்தை மனைவி – பிள்ளைகளிடம் காட்டும் சிலரது கையாலாகாத பொறுக்கி இயலாத்தனத்துக்கு ஒப்பானதுதான் இதுவும்.

இது அடுத்தடுத்து தொடராக கடத்தப்படுகிறது. ஆனால் அதன் உச்சம் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவும் ஒருவித மனநோய்தான்.

மேலத்தேய ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் உலக ஞானத்தை பெறவே அங்கு செல்கிறார்கள். இங்கு அப்படியில்லை. படிப்பதை விட அடிமைகளாக வதைக்கப்படும் ஒரு கொடூரத்துக்கு முகம் கொடுக்வே செல்கிறார்கள். இலவசமாக கல்வி கற்ற பின் இறுதியில் வேலை ஒன்றைத் தா என அரசிடம் கெஞ்சி போராட்டம் நடத்தும் ஒரு இழி நிலைதான் இவர்களிடம் உள்ளது. இவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறிய பின் கூட தாமாக ஒரு வேலையே தேடிக் கொள்ளும் தகுதியில்லாதோராகக் காணப்படுகிறார்கள். காரணம் அவர்களது அன்றைய எண்ணம் படிப்பில் இருந்ததில்லை. இதில் பலர் விதி விலக்காகலாம்.

பகிடி வதை என்பது மனித நேயமற்ற மிருகத்தனம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒருத்தர் விரும்பாத போது அவருக்கு ஒரு தண்ணியை கூட நாம் வற்புறுத்திக் கொடுத்தல் தவறான ஒரு செயல்தான். ஆனால் அவர்களது விரும்பம் இன்றி அழுத்தம் கொடுத்து சேட்டைகளை செய்விப்பது என்பது கல்விசார் ஒரு சமூகத்தின் செயற்பாடாக இருக்க முடியாது. அதிலும் பாலியல் சேட்டை என்பது????

இப்படியானவர்கள் ஒரு நாட்டின் எதிர்கால தலைவர்களாவார்கள் என்பது பொய்யான ஒரு நம்பிக்கையாகும்.