வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்

0
52

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு அம் மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி மற்றும் வெடிவைத்தகல் ஆகிய கிராமங்களில் கிராம சேவகராகப் பணியாற்றும் செல்வராஜா சுபாஸ் என்னும் கிராம சேவகரின் இரு பிரிவுகளும் மழையால் பாதித்த நிலையில் ஊஞ்சல் கட்டி பிரதேச மக்களை பார்வையிட்ட பின்னர் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கலாபோகஸ்வெவ பகுதிக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற போது கஜபாபுர பகுதியில் பாய்ந்து சென்ற ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இவ்வாறு கிராம சேவகர் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அந்த ஆற்று நீரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் உடனடியாக மூவர் ஆற்றில் குதித்து நீண்ட போராட்டத்தின் மத்தியில் கிராம சேவகரை மீட்டுள்ளனர்.

இதன்போது கிராம சேவகர் காயமடைந்ததுடன், அவரது உடமையில் இருந்த கைத் தொலைபேசி மற்றும் பேஸ் உட்பட்ட அனைத்து உடமைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

மீட்கப்பட்ட கிராம சேவகர் தற்போதுசிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.