கோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம்! ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்

0
175

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது. இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு பிரதான வேட்பாளர்கள் தமது பிரசாரநடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதேவேளை சிறபான்மை கட்சிகளின் ஆதரவினை இரு பிரதான வேட்பாளர்களும் பெற்றுக் கொள்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தனது ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கவில்லை. இதற்கிடையில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு யாதுதென சிறீதரனிடம் கேட்டபோது,

2005 ஆம் ஆண்டு நாம் தேர்தலைப் புறக்கணித்தபோது காரணம் நியாயமாது. தமழர்கள் ஆயுத பலத்துடன் நின்று அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்ட போதே விடுதலைப்புலிகளினை பிளவு படுத்தி தமிழர்களின் பலத்தை பலவீனப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாடம் ஒன்றினை புகட்ட வேண்டிய தேவை இருந்தது. அதனால் தமிழர்களாகிய நாம் தேர்தலைப்புறக்கணித்தோம். அப்போது தமிழர்களிடம் ஆயுதபலமும் படையணிகளின் பலமும் இருந்தது. தற்போது தமிழர்களிடம் உள்ள ஒரே பலம் வாக்குகள் ஆகும் அந்தப்பலத்தினை காட்டவேண்டிய தேவை தமிழர்களிடம் தற்போது உள்ளது .

கோத்தபாய ராஜபக் ஷவை ஆதரிப்பதாக அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக என்பது குறித்தும் நாம் தீர்மானமெடுக்க காலம் உள்ளது. இப்போது பிரதான வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக முன்வைத்து வருகின்றனர். ஆகவே இன்னமும் சிறிது நாட்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்ற வகையில் நாம் மக்களுக்கு ஏற்ற தீர்மானம் ஒன்றினை எடுப்போம்.

தமிழ் மக்கள் எம்மை பிரதிநிதிகளாக தெரிவு செய்து அரசியல் களத்தில் எம்மை இறக்கியுள்ள நிலையில் எமது மக்களை கைவிட்டு சுயநல அரசியல் செய்ய எம்மால் முடியாது. நாம் எப்போதும் எமது மக்கள் நலன்கள் சார் விடயங்களையே முன்னெடுப்போம்.

கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது. இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.