நவம்பர் 17 காலையில் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டாபய முழக்கம்!

0
62
நான் ஜனாதிபதியானால் இலங்கையை பாதுகாப்பான நாடாக மாற்றுவேன். ஜனாதிபதியானதும் எனது முதல் வேலை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை விடுவிப்பதே என தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
இன்று (9) அநுராதபுரத்தில் நடந்த கோட்டாபயவின் முதலாவது பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து ஒரு தசாப்த காலத்திற்குள் மத தலங்களிற்கு பாதுகாப்பாக செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக கோட்டாபய குறிப்பிட்டார்.
அபத்தமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை விடுவிப்பதே தனது முன்னுரிமையான பணியென்றும் குறிப்பிட்டார்.
“நவம்பர் 17 காலை, இந்த வீரர்கள் அனைவரையும் விடுவிப்பேன்” என்று தெரிவித்தார்.
22 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கான சலுகைகளை அதிகரிப்பதாகவும், ஏழைகளின் தரத்தை உயர்த்துவதாகவும் ஷஉறுதியளித்தார். கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது எங்கள் கடமை என்றார்.
சமீப காலங்களில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் விவசாயிகளால் பெறப்பட்ட நுண் நிதிக் கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் நாங்கள் இல்லாமல் செய்வோம் என்றார்.
விவசாயிகளின் அறுவடைகளை சேமித்து வைக்க போதிய சேமிப்பிடங்களை உருவாக்குவதாகவும், விவசாயிகளின் உற்பத்திகளை நியாயமான விலையில் வாங்குவதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதும் தனது முன்னுரிமைகளில் ஒன்று என்றார்.
அண்மையில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க நிபுணர்களிடமிருந்து விஞ்ஞான ரீதியான ஆலோசனையைப் பெறுவதாக கோட்டாபய தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் தனது முதல் பட்ஜெட்டில் தொடங்கி கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
11 தமிழர்கள் கடத்தல் உள்ளிட்ட, தமிழ் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொலை தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே பாதுகாப்பு தரப்பினர் சிறைவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.