செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு சார்ள்ஸ் வேண்டுகோள்

0
68
முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற கட்டளையை மீறி நடைபெற்ற அடவாடிகளுக்கு வேட்பாளர்களின் கருத்து என்ன என்பதை தெரிவித்துவிட்டு வாக்கு கேட்க வாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்த நிகழ்வையும், இந்த விவகாரத்தில் ஒருசிலரே ஈடுபட்டனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த குருமார்களோ அல்லது பௌத்த இளைஞர்களோ ஈடுபட்டனர் என்பதை ஏற்க முடியாது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கேட்க விரும்புகின்றேன். அத்துடன் இந்த வன்மமான செயலை அரசாங்கம் எவ்வாறு பார்க்கின்றது.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் வருகிறது. வேட்பாளர்கள் வருகிறார்கள். இந்த சூழலில் நான் ஒரு விடயத்தை வேட்பாளர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் உங்களில் கருத்துக்கள் என்ன? இந்த விடயம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து விட்டு மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும்.

இதேவேளை, நாட்டின் தொல்பொருள் திணைக்களம் அண்மைக்காலமாக ஒரு தன்னிச்சையாக பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

அந்த அமைச்சராக தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் இருக்கிறார். இந்த நிலையில் அரசாங்க திணைக்களங்கள் ஊடாக தமிழர் பிரதேசங்களை அபகரித்து எமது இன விகிதாசாரத்தை அழிப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும்.

எமது மக்கள் சிங்கள தலைவர்கள் ஆட்சிசெய்யும் இந்த நாட்டில் வாழமுடியாது என்பதற்கு இது நல்ல உதாரணமாக இருக்கின்றது. ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுமானால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் குறிப்பிட்டார்.