யாழ் போதனா வைத்தியசாலையின் அசன்டையீனத்தால் உயிரிழப்பா?

0
44

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்தத்தினால் சட்டத்தரணியொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பிள்ளைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதற்கு ஆதாரமாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

அச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி பூநகரி பகுதியில் நடந்த விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 நாளின் பின்னர் அவரது உடல்நலம் தேறியது.

இந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டு, உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவரது வயிற்று பகுதி வீங்கியுள்ளது.

அது தொடர்பில் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, குழாய் பொருத்தினதால் அப்படிதான் இருக்கும் என பொறுப்பற்றவிதமாக பதில் அளித்தனர்.

எனினும், வீக்கம் அதிகரிக்க, மீண்டும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சத்திர சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும், சத்திர சிகிச்சை தவறினால் வீக்கம் ஏற்படவில்லை, இது சாதாரண நிலைமைதான் என பதிலளிக்கப்பட்டுள்ளது.

தாம் கூறியவை எதையும் ஏற்காமல் மூன்று நாளாக குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழாய் தவறான முறையில் பொருத்தப்பட்டதும், குழாய் மூலம் செலுத்தப்பட்ட உணவு இரப்பைக்கு வெளியில் சென்று, தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இரப்பைக்கு வெளியில் உணவு சென்று தங்கி, தொற்று ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிய நிலையில், மீண்டும் பிறிதொரு வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இரைப்பைக்கு வெளியில் உணவு சேர்வதால் உணவு நஞ்சாவதால் ஏற்படும் பாதிப்பை இலகுவில் சரி செய்ய முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரணத்தினால், கடந்த 6ம் திகதி சட்டத்தரணி உயிரிழந்தார்.

இதையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் நம்பிக்கையில்லையென குறிப்பிட்டு, யாழ் நீதிவானின் அனுமதியை பெற்று, உயிரிழந்தவரின் உடலை கொழும்பிற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர் உறவினர்கள்