கோட்டாபயவுக்கே ஆதரவு- தயாசிறி

0
52

சின்னம் தொடர்பில் பிரச்சினை உள்ளதுதான் என்ற போதிலும் கூட்டணி அமைப்பதற்கு அதனை சிக்கல்படுத்திக் கொள்வது தற்பொழுது அவசியமில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாறிசி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்றிரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கானது மட்டுமேயன்றி, பொதுஜன பெரமுனவின் தாமரை மலர் மொட்டு சின்னத்துக்கு அல்லவெனவும் அவர் மேலும் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு பெரும் தடையை ஏற்படுத்திய ஒன்றாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் காணப்பட்டது. இந்த சின்னம் இந்திய பிரதமர் மோடியின் சின்னம் எனவும், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் இந்த சின்னத்துக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சகல இனங்களையும் அரவணைத்துச் செல்வதென்றால், இந்த சின்னம் மாற்றப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளதாகவும் பேச்சுவார்த்தைகளின் போது பொதுஜன பெரமுனவிடம் சுதந்திரக் கட்சி தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.