உலகின் சவால்களுக்கு காந்தியின் போதனைகள் தீர்வளிக்கும் – பிரதமர் நரேந்திரமோடி

0
68

உலகம் சந்திக்கும் எந்த விதமான சவால்களுக்கும் மகாத்மா காந்தியின் போதனைகள் தீர்வளிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை, விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தியதை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் விதத்தில் மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திமோடி பங்கேற்றார்..

பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து, மரியாதை உயர்ந்துள்ளதை உணர முடியும் என்றார். உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் பங்களிப்பு குறித்து உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக கூறினார்.

சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாகவும், இந்தியாவின் பாஸ்போர்ட் தற்போது மிக வலிமையானதாக மாறி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஐ.நா. சபை மகத்தான உற்சாகத்துடன் பதிவு செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கு, காந்தியின் போதனைகள் தீர்வளிப்பதாக இருக்கும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

ஆஸ்ரமத்தில் இருந்த சிறுவர்கள், தன்னார்வலர்களுடன் உரையாடிய மோடி, ஆசிரமத்தின் பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார்.

காந்தி பிறந்தநாளையொட்டி சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.