கனடிய தேர்தல் களம்: இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா?-பகுதி 1

0
114

இன்னும் நான்கு வாரங்களில் ஒக்டோபர் 21ஆம் நாள் கனடாவில் 43வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் என்ற நிலையில் இன்றைய நிலையில் தேர்தல் களநிலவரம் என்ன? எனப் பார்ப்போம்.

கனடாவின் பாராளுமன்றத்திற்கான 338 தொகுதிகளில் 184 தொகுதிகளை கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை விட 14 தொகுதிகளை அதிகம் பெற்று ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைத்தது. அதேபோன்று அளிக்கப்பட்ட வாக்குகளில் 39.5 சதவீதத்தை அது பெற்றுக் கொண்டது. தற்போதைய நிலையில் அது மீண்டும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் நிலையில் இல்லை. அதன் ஆதரவு நிலை 35 சதவீதத்தைக் கடந்து இன்னும் இதுவரை செல்லவில்லை. கடந்த தேர்தலைவிட 20 முதல் 30 தொகுதிகளை குறைவாக வெல்லும் நிலையிலேயே அது உள்ளது. குறைந்தபட்சம் 38 சதவீத வாக்குகளையாவது பெற்றாலே பெரும்பான்மை ஆசனங்களை நோக்கி நகரலாம் என்ற நிலையில் அது வரும் வாரங்களில் பெரும் முன்னேற்றத்தை கண்டாக வேண்டும். ஆனாலும் தற்போதைய நிலையில் அதிக ஆசனங்களைப் வெல்லும் கட்சியாக அது தொடர்ந்தும் உள்ளது.

அதேவேளை எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி கடந்த தேர்தலில் 31.9 சதவீத வாக்குகளுடன் 99 தொகுதிகளை வென்றது. இன்றைய நிலையில் அது குறைந்தபட்சம் 40 தொகுதிகளையாவது மேலதிகமாக வெல்லும் நிலையிலேயே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் லிபரல் கட்சியில் ஏற்ப்பட்ட சிறிய சரிவு இரண்டு கட்சிகளுக்குமிடையிலான வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் எண்ணிக்கையிலான இடைவெளியை மிகவும் குறைத்துவிட்டது என்பதுவும் உண்மை. கன்சவேட்டிவ் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை வெற்றியைப் பெற வேண்டுமானால் அது தன்னை நோக்கிய ஒரு பெரும் அலையை வரும் நான்கு வாரங்களுக்குள் உருவாக்கியாக வேண்டும். அதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது தென்படவில்லை. ஆனால் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற நிலையை ஏய்துவதற்கான வாய்ப்பை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது.

அடுத்து மூன்றாவது கட்சியான என்டிபி எனப்படும் புதிய சனநாயகக் கட்சியை எடுத்துக் கொண்டால் அது கடந்த 2015 தேர்தலில் 19.7 சதவீத வாக்குகளுடன் 44 தொகுதிகளை வென்றது. அது அதே எண்ணிக்கையிலானதோ அல்லது அதைக் கடந்து அதிகரித்த எண்ணிக்கையிலான தொகுதிகளை வெல்லும் வாய்ப்புக்கள் அறவே கிடையாது என்ற நிலையிலேயே இத்தேர்தலை அது எதிர்கொள்கிறது. இன்றைய நிலையில் அது கடந்தமுறை எண்ணிக்கையில் இருந்து 20 முதல் 30 தொகுதிகளை இழக்கும் நிலையிலேயே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அதன்நிலை சற்று மேம்பட்டிருக்கிறது. இறுதியில் அதன் வாக்கு வங்கியில் ஒரு பகுதி லிபரல் கட்சிக்கு செல்லாது தடுக்க புதிய சனநாயகக்கட்சி தொடர்ந்தும் கடினமாக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது. எதுஎவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் கட்சி அந்தஸ்சிற்கு தேவையான 12 ஆசனங்கள் என்ற நிலையை தக்கவைக்கும் நிலையிலேயே அது உள்ளது அதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடாது பார்த்துக் கொள்வது அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

அடுத்து கியூபெக் மாநிலத்தின் பிரிவினைவாதக் கட்சியான புளொக் கியூபெக் கட்சி கடந்த தேர்தலில் 4.7 சதவீத வாக்குகளைப் பெற்று கியூபெக்கின் 78 தொகுதிகளில் 10 தொகுதிகளையே வென்றது. இம்முறை அது அங்கு மேலதிக தொகுதிகளை வெல்லும் நிலையிலேயே இன்று உள்ளது. தேர்தல் அறிவிப்பின் பின் தன் வாக்குவங்கியை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் ஒரே கட்சியாகவும் இதுவே உள்ளது. அதற்கான ஆதரவு அங்கு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது இறுதியில் எட்டும் உயர்நிலை சிறுபான்மை ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்க. இதன்மூலம் அது இம்முறை 12 ஆசனங்களையாவது வெற்றிகொண்டு பாராளுமன்றத்தில் கட்சி அந்தஸ்தை பெறும்நிலை இன்றைய நிலையில் பிரகாசமாகவே உள்ளது எனலாம்.

அடுத்து பசுமைக்கட்சி எனப்படும் கிறீன் கட்சி கடந்த தேர்தலில் 3.5 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியை வெற்றி கொண்டது. 1983இல் தோற்றம் கண்டு 2011 தேர்தலில் முதன்முறையாக பாராளுமன்ற பிரவேசம் கண்ட பசுமைக்கட்;சி சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டாவது வெற்றியையும் கண்டது. கடந்தமுறையை விட நிச்சயம் அதிகரித்த அதாவது குறைந்தபட்சம் இரட்டிப்பான வாக்குவங்கியை இத்தேர்தலில் எட்டும்நிலை பிரகாசமாக உள்ளதால் அது தனது ஆசனங்களின் நிலையையும் இரட்டிப்பாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதன் பிரசன்னம் வரும் பாராளுமன்றத்திலும் நிச்சயம் உண்டு. இறுதியாக இம்முறை தேர்தல் களம் கண்டுள்ள மக்சி பேனியர் தலைமையிலான புதிய கட்சியான மக்கள் கட்சி தாக்கத்தை இத்தேர்தலில் செலுத்தும் நிலை இல்லை. அது பாராளுமன்ற பிரவேசத்தை ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்று மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆகமொத்தத்தில் இன்றைய நிலையில் சிறுபான்மை ஆட்சியே என்ற நிலையே உள்ளது. இந்நிலையில் கடந்த தேர்தலில் அத்திலாந்திக் கனடாவின் 32 தொகுதிகளையும் ரோரன்ரோ மாநகரத்தின் 25 தொகுதிகளையும் ரோரன்ரோ பெரும்பாகத்தின் 54 தொகுதிகளில் 49 தொகுதிகளையும் ஒன்ராரியோவில் 80 கியூபெக்கில் 40 என தொகுதிகளின் வெற்றியினூடாகவே லிபரல் கட்சியின் வெற்றி சாத்தியமானது. இம்முறை மாநிலங்கள் ரீதிகாக எத்தகைய நிலை தென்படுகிறது என நாளைய ஆய்வில் பார்ப்போம்…

நேரு குணரட்ணம்

Image may contain: 6 people, people smiling, beard and text