காங்கிரஸ் கட்சி விமர்சனம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு

0
69

காஷ்மீரில் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் இருப்பதாகவும் இதனை இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுதிபடுத்தியுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் ஒப்புதல் மூலம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பகுதிகளாக பிரித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. மத்திய அரசின் செயலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான் காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக காங்கிரஸூம் கூறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி பல விஷயங்களில் நான் இந்த அரசுடன் முரண்படுகிறேன். ஆனால் நான் ஒரு விவகாரத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். எனவே அந்த விவகாரத்தில் பாகிஸ்தானோ அல்லது வேறு ஒரு நாடோ தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை உள்ளது. அங்கே வன்முறை இருக்கிறது ஏனென்றால் அது பாகிஸ்தானால் தூண்டப்படுகிறது. பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், காங்கிரஸ் கட்சியே இதனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே நடமாட முடியாதபடி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பொது இடங்களில் கூடவும் அனுமதிக்கப்படவில்லை. தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை முதலில் நீக்க வேண்டும். இதுதான் முதல்படியாகும் மேலும் இந்த கருத்தை நாங்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. ஏழை மக்கள், அப்பாவி மக்கள் 50 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸூம் கூட கூறியிருக்கிறது.எனவே காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மோடி இதனை கண்டுகொள்ளவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.