இலங்கை தேர்தல் களம்: முடிவெடுக்க திணறும் முக்கிய கட்சிகள் – ஓர் அலசல்

0
77

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில், தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 18ஆம் தேதி வர்த்தமானி ஊடாக அறிவித்தது.

இந்த தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னதாகவே அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் சில தமது ஜனாபதிபதி வேட்பாளர்களை அறிவித்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கடந்த மாதம் 11ஆம் தேதி அறிவித்தது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ

அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரான அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு செலுத்த வேண்டிய பணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். அமரசிங்க ஆகியோர் நேற்று இந்த தேர்தல் தொகையை செலுத்தியுள்ளனர்.

இந்த தொகையை கட்டிய இன்னொருவர் ஸ்ரீலங்கா சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவரும் சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா ஆவார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் பெண் வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த பணத்தை செலுத்தினார்.

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை செலுத்தினார்.

இந்த நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இதுவரை தமது நிலைப்பாட்டை வெளியிடாத பின்னணியில், தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு

ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், மற்றுமொரு தரப்பினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளாந்தம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்து பிபிசி தமிழுக்கு அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படுகிற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கைகோர்த்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு அதிகளவிலான செல்வாக்கு காணப்படுவதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை களமிறக்குமாறே தமது கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரு தினங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவரங்களை கட்சியின் தலைவர் வெளியிட தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தீர்மானத்தை இன்னும் எட்டாத நிலையில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம், பி.பி.சி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை தீர்மானம் எட்டப்படாத நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் தொடர்பாக எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு

ரிஷி செந்தில்ராஜ்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியான மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ்

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்காக திட்டங்களை, கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே வகுத்துக் கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சியான மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ் பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதோடு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதாகவும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியாகியுள்ள செய்தி, முற்றிலும் தவறானது எனவும், அவர் அமெரிக்க குடியுரிமையை முற்றாக நீக்கி, தற்போது முழு இலங்கை பிரஜையாகியுள்ளார் எனவும் ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு

இராமலிங்கம் சந்திரசேகரன்
தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் மத்திய செயற்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்

மக்கள் விடுதலை முன்னணி 30க்கும் அதிகமான சிவில் அமைப்புக்களை ஒன்றிணைந்து, தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பின் கீழ் இந்த முறை தேர்தலின் களமிறங்கியுள்ளதாக அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாடு தழுவிய ரீதியில் பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்தே தான் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்வரும் தினங்களில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து பல்வேறு மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், அதனூடாக தமது தேர்தல் பிரசாரத்தையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கை ஊடகவியலாளரின் பார்வை

ஸ்ரீ எவ்.எம்மின் மூத்த ஊடகவியலாளர் நிலந்த ராஜேந்திர
ஸ்ரீ எவ்.எம்மின் மூத்த ஊடகவியலாளர் நிலந்த ராஜேந்திர

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், பிரதான கட்சிகளின் செயற்பாடுகள் ஒரு நிலையற்ற தன்மையை பிரதிபலிப்பதாக ஸ்ரீ எவ்.எம்மின் மூத்த ஊடகவியலாளர் நிலந்த ராஜேந்திர பிபிசி தமிழிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோது கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பாக மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் கடந்த 71 வருடங்கள் ஆட்சி அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது தொடர்பாக அவர் கவலை வெளியிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமையினால், பிரதான கட்சிகளுக்கு செல்லும் வாக்குகள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதனால் ஒரு வேட்பாளருக்கு 50 சதவீதத்தை தாண்டிய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த முறை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவு வேட்பாளர்கள் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், வாக்குகள் சிதறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இறுதி வரை தேர்தல் நிலவரங்களை கணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நிலந்த ராஜேந்திர தெரிவிக்கிறார்

தொகுப்பு – பிபிசி தமிழ்