கோத்தாவை ஐனாதிபதியாக்க 360 பாகையிலும் டீல்? அவதானி-

0
101

கோத்தபாயவை ஐனாதிபதியாக்க 360 பாகையிலும் டீல் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. பொதுவாக முஸ்லீம்கள் கோத்தாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நம்பப்படுகிறது. அவரை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளருக்கு முஸ்லீம்கள் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக கிஸ்புல்லாவை களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதுவரை நடைபெற்ற ஐனாதிபதி தேர்தல்களில் சகல விடயங்களும் நாட்டுக்குள்ளே தான் நடந்திருக்கும். இப்போது நாடு கடந்த அமைப்புக்களுடன் டீல் நடப்பதாக தெரிகிறது.
கடந்த ஐனாதிபதி தேர்தலின் முடிவில் மகிந்த வடகிழக்கில் வாக்களிப்பு வீதம் உயர்வாக இருந்ததை அறிந்த போதே தனது தோல்வியை தான் உணர்ந்ததாக குறிப்பிட்டார். பொதுவாக சிறுபான்மையினர் தமக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

அண்மையில் லண்டனில் வளவாளர்கள், வலைப்பதிவாளர்கள்…. என தம்மை புலமையாளர்கள் என அறிவித்துக் கொள்ளும் தரப்பினர் தமிழ் தேசிய முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமாரை சந்தித்தனர்.
இது பற்றி சேரமான் என்றழைக்கப்படும் நபர் குணாளன் என்பவரை தொடர்பு கொண்டு (1983 யூலை கலவரம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் இளைஞர் பேரவை செயலாளராக விளங்கியவர் குணாளன்)தாங்கள் எதிர் வரும் ஐனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குறிப்பிட்டதாக தெரிய வருகிறது.இதற்கு குணாளன் ‘இதற்கான டீல் கோடியிலா? இலட்சங்களிலா?’ எனக் கேட்டதாக பரவலாக செய்திகள் உலா வருகின்றன. கடந்த ஐனாதிபதி தேர்தலிலும் இவ்வாறு நிராகரிக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் மக்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்பதை கஜேந்திரகுமார் மறந்து விட்டதாக தெரியவருகிறது அப்போதே மக்கள் தெளிவாக பாடம் புகட்டினர். தேசிய தலைவர் என்பது ஒருவரை தான் குறிப்பிடும் என்று. சரியோ பிழையோ அவர் விடுக்கும் வேண்டுகோளுக்கு தான் மதிப்பளிப்போம் என்று.இந்த லண்டன் சந்திப்புப்பற்றி முன்னாள் போராளி சுப்பிரமணியம் பிரபா என்பவர் தனது முகநூலில் குறிப்பிட்டவற்றை அப்படியே தருகிறோம் “தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தால் வெற்றிபெறப்போவது கோத்தபாய ராஜபக்சதான் என்று தெரிந்தும் தேர்தலை புறக்கணிக்க கோருவோர் யாரின் கையாட்களாக இருப்பார்கள்? அவர்களின் நோக்கம் எதுவாக இருக்கும்? 2005 இல் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆலோசனை கூறிய பல புலம்பெயர் ஆலோசகர்கள் மற்றும் அமைப்புக்கள் நடத்தியோர் 2009 க்கு பின்இலங்கைக்கு நல்லிணக்க விஜயம் செய்ததும் மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்து தங்கள் தொழில்களை இலங்கையில் விரிவு படுத்தியதும் நாம் அறிந்தவைதான்.

இன்றோ அதே அணிகள் மீண்டும் கோத்தபாய ராஜபக்சவை வெற்றிபெற வைக்க தங்கள் அரசியல் ஏஜண்டுகளை வைத்து புலம்பெயர் தேசங்களிலும் உள்ளூரிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ 2005 இல் புலிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புத்தான் அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பேன்; இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவேன் என்று பிரச்சாரம் செய்த ரணில் விக்கிரமசிங்க வெறும் 178,000 ம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போய் மகிந்த ராஜபக்ச சனாதிபதி ஆனார்.
சீனாவின் உதவியோடு தமிழர்களை அழித்தொழிக்கும் யுத்தத்தில் அடுத்த ஆண்டே இறங்கினார். சர்வதேச மட்டத்தில் நாம் பெரும் ஆதரவோடு இருக்கின்றோம் என புலிகளுக்கு ஆலோசனை கூறியவர்கள் கருணாதான் எல்லாவற்றிற்கும் காரணமென்று கை காட்டிவிட்டு தாம் தப்பித்துக்கொண்டனர். தெரிந்தே விழுந்த குழியில் இருந்து தாமே எழவேண்டிய கட்டாயம் புலிகள் அமைப்புக்கு இருந்தது. அதன் தலைமைக்கு இருந்தது. தம் பலத்தை மாத்திரம் கொண்டு அவர்கள் இறுதிவரை போராடி மடிந்தார்கள். மக்களும் மடிந்தார்கள். இன்று பூகோள அரசியல் பேசும் நபர்கள் எல்லாம் அன்று பூகோள அரசியல் பேசவில்லை. சிலவேளை புலிகள் இல்லாமல் போனால்தான் பூகோள அரசியல் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள் போலும்.பலம் பொருந்திய ஓர் விடுதலை அமைப்பு உயிர்ப்போடு இருக்கும்போதே பூகோள அரசியல் ஊடாக ஒரு தீர்வினைக் கொடுக்காத சர்வதேச சமூகம் இன்று கோத்தபாய சனாதிபதியானால் உடனே விழுந்தடித்துக்கொண்டு தீர்வினை வழங்கிவிடுமென்று நிலவில் பாட்டி வடை சுட்ட கதையைப்போல் கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்

கஜேந்திரகுமார் போன்றவர்கள். 2009 க்கு பின் நடைபெற்ற அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி நடத்தியபோது இந்த பூகோள அரசியல் விற்பன்னர்கள் ஏன் தமிழ் மக்களுக்கு பூகோள அரசியல் ஊடாக பேரம்பேசி தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை?தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியவுடன் பூகோள அரசியல்வாதிகள் திடீரென்று விழித்தெழுந்து மகிந்த இருந்திருந்தால் சர்வதேசம் தீர்வு கொடுத்திருக்கும். அநியாயமாக எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கின்றனர். 2009 க்குப் பின்னரான 6 ஆண்டுகால மகிந்த ஆட்சியில் இவர்களெல்லாம் பூகோள அரசியல் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் என்ன?
2015 க்குப் பின்னரான ஆட்சிமாற்றம் தமிழ்மக்களுக்கு நிரந்தத் தீர்வினை வழங்கத் தவறினும் அது ஓரளவுக்கு ஆசுவாசமான வாழ்வினை வழங்கி இருக்கிறது. தங்கள் பிரச்சினை என்ன என்பதை தமிழ் மக்கள் வெளிப்படையாகப் பேசும் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. புலிகள்தான் பிரச்சினை அவர்கள் ஒழிந்தவுடன் இங்கு அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதென்று மகிந்த அணி செய்த பிரச்சாரத்தை உடைத்தெறி ந்திருக்கிறது இந்த பேச்சுச் சுதந்திரம். இங்கு பிரச்சினை புலிகள் அல்ல அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தானென்று சர்வதேசம் உணர்ந்துகொள்ளத்தலைப்படும் இக்கட்டத்தில் மீண்டும் தமிழ் மக்களின் குரல்களை ஒடுக்கி இங்கு யாரும் எதற்காகவும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை அனைத்தும் சுமுகமாக இருக்கிறதென்று கோத்தபாய ஊடாக சொல்லவைக்க முயற்சிக்கின்றனர்.

ஆம் கோத்தா ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் நாட்கள் கடந்து காணாமல் போகடிக்கப்பட்டவர்களுக்காய்ப் போராடுவோர் அடுத்த நாளே போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அடிக்கடி கறுப்புக்கொடியோடு தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோர் தாமுண்டு தம் வேலையுண்டு என பெட்டிப்பாம்பாய் மாறிவிடுவார்கள். எழுக தமிழென்று இன்று தெருவில் திரியும் அணியை வடக்கில் காணவே கிடைக்காது. தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதென்று உள்ளிருந்து பேச ஒருவரும் இருக்கமாட்டார்கள். பேசுபவர்கள் உயிருடன் இருக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன் இன்று முகநூலில் புலம்பெயர் தேசத்தில் இருந்து களமாடும் நபர்கள் கூட உள்ளூரில் இருக்கும் தங்கள் உறவுகளுக்கு பிரச்சினையென்று ஓரமாகி விடுவர். பிறகென்ன இலங்கை அமைதிப்பூங்கா ஆகிவிடும் இங்கு என்ன பிரச்சினை உண்டு என்று எவருக்குமே தெரியாது. பிறகு பூகோள அரசியல் என்ன தீர்வினை கொடுத்துவிடும்? கோத்தாவின் விசுவாசிகளுக்குக் கோடிகளில் பணம் வேண்டுமானால் கிடைக்கும். யாருக்கு தெரியும் நான் கூட நாளை கோத்தபாய மாத்தயாவுக்கு ஜெயவேவா போடக்கூடும். ஏனெனில் எனக்கும் உயிர் முக்கியமல்லவா…“
*
இதேவேளை கலை மார்க்ஸ் என்பவர் ஒரு விடயத்தை தனது முகநூலில் சுட்டிக் காட்டினார். ” அண்மையில் லண்டனில் நடந்த கஜேந்திரகுமாரின் சிறு கூட்டம் தொடர்பானது. படத்தில் இருக்கும் அந்த நபர் திருமாவளவனின் ஈஸ்ட்ஹாம் கூட்டத்தைக் குழப்ப முயன்றவர். கஜேந்திரகுமார், சம்பந்தன், சுமந்திரன் எல்லாம் நமக்கு ஒண்ணுதான். ஆனா கஜேந்திரகுமார் தான் சேர்த்துக் கொண்ட மக்கள் விரோதிகள் தொடர்பில் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். கஜேந்திரகுமார் கட்சியினர் வடக்கில் புரியும் சண்டித்தனங்களையும் நாமறிவோம்“
*
இவரது குறிப்பில் கடைசி வசனத்தை பெரிது படுத்தாமல் விடலாம். எனினும் திருமாவளவனின் புத்தக வெளியீட்டு நிகழ்வை குழப்ப எடுத்த முயற்சியையும் அதன் பின்னணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட தமது தொலை தொடர்பு கருவிகளை மீளளிக்குமாறு சென்னையில் நீராகாரமின்றி உண்ணா நோன்பிருந்தார் தலைவர் பிரபாகரன்.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக அப்போது மாணவனாக இருந்த திருமாவளவன் வீதியில் இறங்கிப் பரப்புரை செய்தார். அப்போது இக் குழப்ப வாதிகள் எந்த ஆணியைப் புடுங்கிக் கொண்டிருந்தனரோ தெரியாது. சமாதான காலத்தில் தலைவரையும் சந்தித்தார் அவர்.லேக்கவுஸின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரைச் சாதியைச் குறிப்பிட்டுத் திட்டினார். அது மட்டுமல்ல அமிர்தலிங்கம் போன்றோரின் வரிசையில் பிரபாகரனும் தமிழீழத்தை கை விட்டவரே என எழுதினார்.தீவகப் பெண்களையும் கொச்சைப்படுத்தினார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தனர் சில பிரகிருதிகள். இந் நிகழ்வுக்கு எந்த டீலிலோ பாதுகாப்பு வழங்கினர் சிலர். இவ்வாறான நபர்களுக்கு ஒரு கட்டளைத் தளபதியும் இருக்கிறார் என்பது தான் வேடிக்கை.

இனி என்ன செய்வது? பானு,பால்ராஐ, சூசை,தீபன்,சொர்ணம் போன்றோரை இனிமேல் கட்டளைத் தளபதி எனக் குறிப்பிடாமல் விடுவது தான் ஒரே வழி. ஒரு நாட்டில் சார்ஐண்ட் என்ற பதவியே இல்லை. அந்த நாட்டில் சார்ஐண்ட் ஆக இருந்த ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொடுங்கோலனாக மாறினார். பின்னர் புரட்சி மூலம் அந் நாடு விடுவிக்கப்பட்டது.அதன் பின்னர் சார்ஐன்ட் என்ற பதவியையே ஒழித்து விட்டனர். எனவே தமிழரின் தளபதிகளின் கௌரவம் கருதி கட்டளைத் தளபதி என்று குறிப்பிடாமல் விடுவது தான் நலம். இந்த புலம் பெயர் நாட்டுக் கட்டளைத் தளபதியின் பிரதி நிதிகளும் சேர்ந்து தான் தேர்தலை பறக்கணிக்கும் டீலில் இறங்கியுள்ளனர் போல் உள்ளது.

இதே வேளை வரதராஐபெருமாள்,டக்ளஸ்,பிள்ளையான்,கருணா, கோபாலகிருஸ்ணன் ஆகியோருடன் முரளிதரனும் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) கோத்தா பக்கம் நிற்கின்றனர். பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்துள்ளார் வரதராஐபெருமாள். ஐனநாயகத்தின் பெயரால் இன்னும் என்னென்ன காட்சிகளைக் காண நேருமோ? போனஸ் ஆசனம் மூலமே வரதராஐபெருமாள் முதலமைச்சரானார்.யாழ்ப்பாணம் கச்சேரியைச் சுற்றி வர இந்திய ராணுவத்தினர் நின்றனர். எவரும் சட்டைப் பைக்குள் ஆயிரம் ரூபாவுக்கு மேல் கொண்டு செல்ல முடியாது. தேர்தலுக்கு யாராவது நியமனப்பத்திரம் தாக்கல் செய்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறான சூழ் நிலையில் முதலமைச்சரான பெருமாள் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானை சந்தித்துள்ளார். கிழக்கு தேசியம் என்பதன் பெயரால் தமிழருக்கு வடக்கு தலைமை வேண்டாம் என்று சொல்பவர்கள் திருமலையையும் இதற்குள் அடக்கி விட்டனர். கிழக்குக்கு தயாகமகே முதலமைச்சராக வேண்டும் என்பது கோபால கிருஸ்ணன் போன்றோரின் அவா. இவர்கள் எல்லோரும் தான் கோத்தா ஐனாதிபதியாக வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்களுடன் தான் ஏதோ வகையில் டீலில் உள்ளனர் புலம் பெயர் பிரமுகர்கள் இந்த பிரமுகர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் எதையும் சொல்லுங்கள் இங்குள்ள மக்கள் தாம் சுயமாகவே முடிவெடுப்பர். இவர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். தயவுசெய்து மாவீரர் நாளில் கொத்துரொட்டி விற்கும் கலாச்சாரத்தையும் இங்கு அறிமுகப்படுத்தாதீர்கள். ஏற்கனவே பானு,பால்ராஐ;சூசை,தீபன்,சொர்ணம் போன்றோரை மீண்டும் சாகடித்து விட்டீர்கள் நீங்கள்.