ஆட்டத்தை ஆரம்பிக்கிறது இந்தியா: கூட்டமைப்புடன் உயர்மட்ட கலந்துரையாடல்’ காணொலி வழியாக விரைவில்?

0
99

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய அரசின் உயர்மட்ட இராஜதந்தர தரப்பினருக்குமிடையிலான கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவுள்ளது. இம்மாத இறுதிக்குள் கலந்துரையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை- சீனா உறவு வலுத்து வருவது, 13வது திருத்தத்தையும் இல்லாமலாக்கும் அரசின் முயற்சிகளின் பின்னணியில் இந்தியா புதிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளதையே, இந்த நகர்வு புலப்படுத்துவதாக இராஜதந்தர வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசு அமைந்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை டில்லிக்கு அழைக்காமல், இந்திய அரசு இழுத்தடித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவே அவசரஅவசரமாக கூட்டமைப்பை சந்திக்க விரும்புகிறது.

தற்போதைய கொரோனா நெருக்கடி காரணமாக இரு தரப்பு போக்குவரத்து தடைகள் காரணமாக, காணொலி வழியாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கும், கொழும்பிலுள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேக்குமிடையில் சந்திப்பு நடந்தது. இதன்போது, 13வது திருத்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவின் அதிருப்தியை, தூதர் வெளிப்படுத்தியிருந்தார். 13ஐ நீக்கும் அரசின் நகர்விற்கு எதிரான சில நடவடிக்கைகள் குறித்தும் அங்கும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் தற்போது கூட்டமைப்புடனான உயர்மட்ட கலந்துரையாடலை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.