சிங்கள மக்களால் கடவுளாக போற்றப்படும் கண் மருத்துவர்

0
57

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணராக கடமையாற்றும் வைத்திய நிபுணர் Dr.M. மலரவன் அவர்களைப் பற்றி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்:

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் உள்ள மக்களின் மனதை வேறு எண்ணங்களினால் நிரம்பிய போதும் தெற்கில் உள்ள சிங்கள மக்களின் மனதில் உறுதியாக வேரூன்றிய தமிழ் மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தியை அநுராதபுர மாவட்டத்தின் மதவாச்சிய, ஹல்மில்லாவேவ என்ற பகுதிகளில் உள்ளவர்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த மருத்துவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணராக கடமையாற்றும் Dr.M. மலரவனின் சிறப்பான மருத்துவ சேவையினால் அநுராதபுரத்திலுள்ள சிங்கள கிராமங்களான மதவாச்சி, பதவிய, ஹெப்பட்டிகொலாவ போன்ற பிரதேசங்களின் ஏழை சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கின்றார்கள். அம் மக்கள் அவருடைய பணியையும் சேவையையும் நன்றியுடன் வணங்குகின்றார்கள்.

மதவாச்சிய கிராமத்தில் வசிக்கும் திரு. W.A.விஜயஸ்ரீ என்ற நீரிழிவு நோயாளி தனது இரு கண்களின் பார்வையையும் இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் Dr.M. மலரவனிடம் வந்து சிகிச்சை பெற்று அவருடைய இடது கண்ணின் பார்வையை பெற்றார். இதற்காக அவர் செலவு செய்தது வெறும் பஸ் கட்டணம் மாத்திரமே.

ஹெப்பட்டிகொலாவ மக்கள் இந்த வைத்தியரை புகழ்ந்து கூறுகையில் அவர் எங்கள் நேரத்தை ஒரு போதும் வீணாக்க மாட்டார்.

நாங்கள் ஏழைகள் என்று அறிந்து சிகிச்சை வழங்கி எங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

வீட்டிற்கு சென்ற எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை விசாரிக்கின்றார். எங்களின் வறுமை நிலையை உணர்ந்து மீண்டும் யாழ்ப்பாணம் பயணிக்க விடுவதில்லை மற்றும் சத்திரசிகிச்சைக்கு செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் வைத்தியசாலையிலேயே செய்விக்கின்றார்.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.M. மலரவன் அவர்களைப் பற்றி கதைக்கும் போது யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.T. சத்தியமூர்த்தி அவர்களைப்பற்றியும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இலங்கையில் சிறந்த அரச சேவையாளர்களுள் நேர்மைக்கான விருது பெற்றவர் என்றும் வவுனியா வைத்தியசாலையினை நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை அமைக்க அடித்தளம் இட்டார் என்றும் கூறுகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.T.சத்தியமூர்த்தி அவர்களின் நிர்வாகத்திறன் மற்றும் கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.M. மலரவன் அவர்களின் மனிதாபிமான செயல்களால் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் அவர்களை வணங்குகின்றார்கள்.