இலங்கையில் புரவி சூறாவளி சீரற்ற வானிலையால் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 10,336 பேர் 79 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய 06 மாவட்டங்கள் இவ்வனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 152 வீடுகள் உள்ளிட்ட 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.
09 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புரவி சூறாவளியானது (இலங்கையை விட்டு) நகர்ந்து கொண்டிருப்பதால், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.