வவுனியா மாவட்டத்தில் ‘புரேவி’ புயல் காரணமாக நேற்று முதல் காற்றுடன் கூடிய கன மழையால் இரண்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் கனமழை காரணமாக அனேகமான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழு கொள்ளவை எட்டிய நிலையில் மேலதிக நீர் வெளியேறிவருகின்றது.
வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் மற்றும் ஏம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்ப்பட்டுள்ளமையால் அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இலுப்பைக்குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும் ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.