வானொலி நிகழ்ச்சிகள் பற்றி
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் எனது நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பல நேயர்கள் தொலைபேசி மூலமாக அழைத்து அதன் உண்மைத் தன்மையை வினவுகின்றனர். அதற்காக இந்தப் பதிவை இட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எனது நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்டன.
நிகழ்ச்சிகளை நடாத்த என்னை அனுமதிக்கக் கூடாது என்று பலமாகக் கோரிக்கை விடுத்து பல தொலைபேசி அழைப்புகள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகத்துக்கு வருவதனால் அது அவர்களுக்குப் பெரும் தொந்தரவாக இருப்பதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. நிகழ்ச்சிகளை தொடர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் கூட்டுத்தாபனத்தினதும் எனதும் நற்பெயருக்கு பாதிப்பை உண்டு பண்ணலாம் என ஊகிப்பதனால் நிறுத்துவதே நல்லது என தீர்மானித்திருப்பதாகவும் அது மேலும் தெரிவித்திருந்தது. கூட்டுத்தாபனத்தை சங்கடத்துக்கு உள்ளாக்க நானும் விரும்பவில்லை. எனவே, நிகழ்ச்சி பரஸ்பர புரிந்துணர்வுடன் தான் நிறுத்தப்பட்டது.
இதுவரை காலமும் நிகழ்ச்சிகளை நடாத்த உதவிய கூட்டுத்தாபனத்துக்கும் அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள்,பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
அல்லாஹ்வின் அருளால் 1988 ஆண்டு முதல் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அறிவையும் ஆற்றலையும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நிகழ்ச்சிகளை கேட்டு வந்த நேயர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமாக துவா செய்கிறேன். அவர்களது துஆக்கள் எனக்காக எப்போதும் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்,
ஐயமும் தெளிவும்,சிந்தனைகளம், கருத்துக்களம், மஜ்லிஷுஷ் ஷூரா போன்ற நிகழ்ச்சிகளால் நேயர்கள் பயனடைந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
இதுவரை காலமும் இனங்களுக்கிடையே நல்லுறவைப் கட்டியெழுப்பும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான விவகாரங்களை கலந்துரையாடி சமூகத்தை நெறிப்படுத்தும் தலைப்புக்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டமையை யாவரும் அறிவர்.
இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் தீவிரவாதம், பயங்கரவாதம், கடும்போக்கு என்பவற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்து தேசப்பற்று, சமாதான சகவாழ்வு, இன செளஜன்யம் என்பவற்றைத் தாங்கிய கருத்துக்களை ஆழமாக விதைப்பதும் இஸ்லாத்தின் நடுநிலைப் பார்வையை உண்டுபண்ணுவதும் நிகழ்ச்சிகளது பிரதான குறிக்கோள்களாக இருந்தன.
எந்தவொரு நிகழ்வுக்குப் பின்னணியிலும் அல்லாஹ் ஒரு நோக்கத்தை வைத்திருப்பான் என்றும் சோதனைகள் என்பன இஸ்லாமியப் பணியிலிருந்து பிரித்து நோக்க முடியாத அல்லாஹ்வின் நியதிகள் என்றும் நாம் அனைவரும் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வே போதுமானவன்.
حسبنا الله ونعم الوكيل
அல்லாஹ் எம் நாட்டை அனைத்து வித தீவிரங்களில் இருந்தும் பாதுகாத்து பரஸ்பரம் புரிந்துணர்வுடன் அனைவரும் வாழ அருள்பாலிப்பானாக!