யாழ்ப்பாணத்தில் மீண்டும் வெள்ளைவான் குழு கத்திமுனையில் சிறுபிள்ளையை வெட்டிக் காயப்படுத்தி பெருந் தொகை நகைகள், பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வெள்ளை வான் கொள்ளைக் கும்பல் கத்திமுனையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த வெள்ளைவான் திருட்டுக் குழுவினர் உரும்பிராய் சென்.மைக்கல் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் கதவினை உடைத்து உள்ளே இருந்த பிள்ளைகள் இருவர், தாய், தந்தையரை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் நீண்ட நேரமாக தேடுதல் நடத்தி பெருமளவான தங்க நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வெள்ளைவான் கொள்ளையர் குழு பிள்ளைகளில் ஒருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தி வீட்டுக்காரர்களை மிரட்டி வீட்டிலுள்ள பொருட்கள் எங்குள்ளன எனக் கேட்டு திருட்டில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பத்தவர்களால் தெரியவருகிறது.
வெள்ளைவான் திருட்டுக் கும்பல் வீட்டிலுள்ள பெருமளவு நகை, பணம் உள்ளிட்டவற்றைத் திருடிவிட்டு .அவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கும்பல் மீண்டும் யாழ்ப்பாணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை ஏமாற்றித் திருட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சிக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் வெள்ளைவான் கும்பலே பலரைக் கடத்திக் கொலை செய்ததுடன் கொள்ளை, வளிப்பறி போன்ற அடாவடிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.