தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தை பிரசுரித்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலிடத்து உத்தரவுக்கமைவாக இந்த வழக்கு இம்மாத ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்படடது.
இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் 2021 மார்ச் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் அவர்களது படத்தையும், அவர் தொடர்பான சொற்களையும் பிரசுரித்தமை பயங்கரவாத தடை சட்டத்திற்கு உட்பட்ட குற்றம் என்று தெரிவித்தே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த காலங்களில் நிலவிய ஆட்சியின் போது ஊடகங்களின் குரல்வளையை நசுக்குவதற்காக ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், கொலைவெறித் தாக்குதல்கள், கொலைகள், கடத்தல்கள் காணமல் போதல்கள் போன்ற அடக்குமுறைகள் மீண்டும் வருமா என்ற அச்ச நிலை தற்போது ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.