யாழ்ப்பாணம் புத்தூரில் சடலமொன்று வீட்டுக் காணியில் எரியூட்டப்பட்டுள்ளது.
புத்தூர் கலைமதி கிராமத்தில் ஏற்பட்ட குடும்ப பகை விரிவடைந்து, இரண்டு தரப்பு மோதலாக நீடித்து வருகிறது. தனிப்பட்ட குடும்ப விவகாரம் பின்னர் இரு தரப்பிற்கிடையிலான மோதலாக- ஒரே சமூகத்திற்கிடையிலேயே இடம்பெற்று வருகிறது.
அதை சாதிய மோதலாக சித்தரிக்க வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரும் சாதியவாதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். புத்தூரிலுள்ள கிராமிய கட்சியொன்றும் அதை சாதிய மோதலாக சித்தரிக்க முயன்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில், ஆதிக்க சமூகத்தினர் உடல்களை தகனம் செய்ய முயல்வதாக குறிப்பிட்டனர்.
இந்த மோதல் உச்சமடைந்து அங்குள்ள கிந்துபிட்டி மயானத்தில் உடல்களை தகனம் செய்வது தடைப்பட்டது. பின்னர் அது நீதிமன்ற விவகாரமாகியது. உடல்களை தகனம் செய்ய தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீட்டில், தகனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், பின்னர் அந்த கிராமத்திலுள்ள கட்சியின் பிரதிநிதிகள் மேலுமொரு மனு தாக்கல் செய்துள்ளதால், அந்த வழக்கு முடிவடையும் வரை மயானத்தில் உடல்களை தகனம் செய்ய வேண்டாமென பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல் காணி ஒன்றில் தகனம் செய்யப்பட்டது.
கிந்துபிட்டி மயானத்தில் உடல்களை தகனம் செய்யக்கூடாதென தடை செய்த தரப்பின் சமூகத்தை சேர்ந்த- எதிர்த்தரப்பிலுள்ள ஒருவர் உயரிழந்திருந்தார். கிந்துபிட்டி மயானத்தில் உடல்களை தகனம் செய்ய முடியாதென்பதால், அருகிலுள்ள மயானமொன்றில் தகவனம் செய்ய முயன்றபேது, அந்த பிரதேசத்தவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, பொதுக்காணியொன்றில் வைத்து நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.