கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு பொலிசார் துணை போகிறார்கள் எனவும், பொலிசாரின் கனரக வாகனங்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் இது சம்பந்தமான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு எனவும் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக இராணுவத்தினரிடம் சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்கும் நடவடிக்கையினை ஒப்படைக்குமாறும் கேட்டுகொண்டனர்.
இது குறித்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொலிசார் கருத்து தெரிவிக்கையில், மணல் அகழ்வு இடம்பெறும் பட்சத்தில் அவர்களை நாம் கைது செய்ய பொலிஸ் அதிகாரி, பொலிஸ்மா அதிபரின் அனுமதி வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டம் பாரிய பிரதேசம் எனவும் வெவ்வேறு இடங்களில் மணல் அகழ்வு இடம்பெறும் பட்சத்தில் குறைந்தளவிலான பொலிசாரை வைத்து தம் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.