காவல் நிலையத்தினுள் வைத்து தனது கணவனால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலால் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிப்பக்கட்டுள்ளார்.
காலி – உடுகம காவல் நிலையத்தினுள் வைத்து நேற்றுக் காலை இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப தகராறு தொடர்பான முறைப்பாடொன்றை விசாரிக்க மேற்படி தம்பதியினர் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அசிட் தாக்குதலுக்கு உள்ளான மனைவிக்கு 28 வயது என்றும் கணவனுக்கு 32 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அசிட் தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவரும் எரிக்காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சந்தேகநபரான கணவர் கைது செய்து, உடுகம நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தம்பதியினரிடையே நீண்டகாலமாக குடும்பத்தகராறு இடம்பெற்றுவந்ததால் குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி வேறோரு நபருடன் வசித்துவந்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் (20) அப்பெண்ணின் கணவர் உடுகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டுக்கமைய, மனைவி அன்றைய தினம் மாலை காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதற்கமைய, கணவனும் மனைவியும் நேற்றுக் காலை உடுகம் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதன்போது, அசிட் போத்தலொன்றை மறைத்து எடுத்துவந்திருந்த சந்தேகநபரான கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.