கோவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருசிலர் அதன் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றுபதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்ற மூன்று வாரங்களின் பின்னரும் உடலில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை . இது தடுப்பூசி மூலம் மட்டும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்தியுள்ளது.
எனவே, கோவிட் தடுப்பூசி பெற்றாலும் கூட சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமனா கூறினார்.