இலங்கையில் தற்போது அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ள நிலையில், நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் காணப்படுகின்றது.
இதையடுத்து 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முடியும். இதற்கிடையில் கம்பஹா மாவட்ட இராஜாங்க அமைச்சருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை நிரப்ப 20 வது திருத்தத்தை ஆதரித்த சஜித் அணியின் எம்.பி. டயனா கமகே நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதையடுத்து மீதமுள்ள ஒரே அமைச்சரவை அமைச்சர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பசில் ராஜபக்ஷ விரைவில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்ற செய்தியை பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. மேலும் “பிரதமர் உட்பட அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு அழைத்திருந்தாலும், இது தொடர்பாக அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என கட்சியின் அறிக்கை கூறியுள்ளது.
பசில் நாடாளுமன்றத்தில் இணைந்து ஒரு அமைச்சுப் பதவியை பெற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பசில் ராஜபக்ஷ மூன்று நிபந்தனைகளை வழங்கியுள்ளார், எனினும் அவர்கள் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளுக்கு உடன்படத் தவறியதால் பசிலின் நாடாளுமன்றப் பயணம் தாமதமாகிவிட்டது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.