அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோபைடனுக்கும், துணை அதிபராகப்போகும் கமலா ஹாரிஸூக்கும் உலக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரும் ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு வாழ்த்து செய்தி கூறியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கத் தேர்தல் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூக்குத்தி அம்மன்’ துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோபைடன், கமலா ஹாரிஸூக்கு மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா ஆசி வழங்குவது போன்ற போஸ்டரை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.