கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உவத்தென்ன சுமண தேரருக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மன்னிப்பு வழங்கியுள்ளார்.
தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு கீழ் இம்மன்னிப்பு ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றது.
2010இல் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளராக இருந்த சுமண தேரர் ரி-56 துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் 50 கைக்குண்டுகள் மற்றும் 210 சுற்று வெடிமருந்துகளை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் திரும்பப்பெறப்பட்டன.
கைதுசெய்யப்படும் போது தேரர் கொழும்பின் மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீ போதிராஜராம விஹாரையின் தலைமை துறவியாக இருந்தார்.
இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகளேதுமின்றி நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் மனிதாபிமானமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவிருந்தாலும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இலங்கை ஜனாதிபதியால் காலத்திற்குக் காலம் விடுதலை செய்யப்படுகின்றார்கள்.
குற்றங்கள் நிரூபிக்கப்படாது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இச்செயலானது இலங்கைச் சட்டங்கள் சிங்கள மக்களுக்குச் சார்பானதாகவும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவுமே கொண்டுவரப்பட்டவை என்பது புலப்படுகின்றது.