கிளிநொச்சியில் உணவின்றி இறக்கும் மாடுகள்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் 500 மாடுகளை வளர்த்து வளரும் தங்கவேலு
சுரேந்திரனின் மாடுகள் போதுமான உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாகவும்,
சேலைன் ஏற்றியும் மாடுகளை காப்பாற்ற முடியவில்லை எனவும் மிகவும்
வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாடுகளை வளர்ப்பதற்குரிய மேச்சல் தரவை இன்மையால் தனது மாடுகளுகு்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இதனால் தற்போது சில நாட்களுக்குள் எட்டு மாடுகள் வரை இறந்து விட்டது என்றும்
போதுமான உணவின்றி பசியால் நடக்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்கு
சேலைன் ஏற்றி வருவதாகவும், ஆனாலும் சேலைன் ஏற்றப்பட்ட மாடுகளிலும்
சிலவும் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் பருவமழைக் காலங்களில் கிளிநொச்சியின் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனால் தனது 500
மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடுவதில் தான் கடும் நெருக்கடியை
சந்திப்பதாகவும் தெரிவிக்கும் சுரேந்திரன், கிளிநொச்சி மாவட்டத்தில்
கால்நடை வளர்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கவலை
தெரிவித்துள்ளார்.

500 மாடுகளை வளர்ப்பது என்பது மிகப் பெரிய சவாலான விடயம் எனத்
தெரிவிக்கும் அவர், மிகவும் நெருக்கடிக்குள் வளர்க்கப்பட்ட மாடுகள் கண்
முன்னே உணவின்றி இறப்பதனை பார்க்க முடியாதுள்ளது என்றும் தற்போது மாடுகளை அக்கராயன் முறிகண்டி வீதியில் நான்காம் கட்டை பகுதியின் காடுகளுக்குள் மேய்ச்சலுக்கு விடுவதாகவும் ஆனால் மாடுகளுக்கு அங்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.