கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவானவர்கள் அத்தியாவசிய சேவைத் துறைகளில் அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான துறைகள் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என கனடா புள்ளிவிபரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நற்சான்றிதழ் மதிப்பீட்டு வழங்குநரான உலக கல்வி சேவைகள் (WES) அமைப்பு கனடாவில் அண்மையில் குடியேறியவர்களின் பொருளாதார நிலை குறித்து அறியும் வகையில் கணிப்பீடு ஒன்றை நடத்தியது.
2020 – ஏப்ரல், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணிப்பீட்டில் 7,496 புலம்பெயர்ந்தோர் பங்கேற்றுப் பதிலளித்தனர்.
இந்தத் கணிப்பீட்டில் வெளியான முடிவுகளின் பிரகாரம் அண்மையில் கனடாவில் குடியேறிய புதியவர்கள் பெரும்பாலும் தங்கள் வருமானத்தை இழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தமது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூா்த்தி செய்ய முடியாது அவர்கள் திண்டாடி வருகின்றனர் எனவும் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 14 வீதம் பேர் வேலை இழந்துள்ளனர். 13வீதம் பேர் குறைந்தளவு நேரம் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சுமார் 17 வீதம் பேர் தங்களது முதன்மை வருமான ஆதாரத்தை தற்காலிகமாக இழந்துவிட்டனர். 6 சதவீதம் பேர் அதை நிரந்தரமாக இழந்துவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களில் ஐந்தில் ஒருவர் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்களில் மூன்றில் ஒருவர் இவ்வாறான சிக்கலை எதிர்கொள்கின்றனர். 10 பேரில் ஒருவர் அன்றாட வீட்டுத் தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்ளச் சிரமப்படுகின்றனர்.
இதேவேளை, வேலை அல்லது வருமானத்தை இழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் அவசரகால உதவித் திட்டங்களை பெறமுடியவில்லை. சுமார் 48 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு காப்பீட்டைப் பெற்றுள்ளர். ஆனால் அண்மையில் குடியேறிய பலர் இந்த நன்மையைப் பெற முடியவில்லை.
அத்துடன், சமூக சேவை நிறுவனங்களின் ஏனைய உதவியையும் பல புலம்பெயர்ந்தோர் அணுகவில்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் இந்த சேவைகளை தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் தாங்கள் அரசின் நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் எனக் கருதவில்லை எனவும் கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் புலம்பெயர்ந்தவர்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சில வழிகாட்டல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவதன் மூலம் அவா்கள் சட்டப் பாதுகாப்பை பெற உரித்துடையவராக்குதல் இதில் முக்கிய பரிந்துரையாகும்.
இதனைவிட புலம்பெயர்ந்தோருக்கு அவர்கள் எந்த சலுகைக்களைப் பெற முடியும்? அவற்றை எவ்வாறு அணுகுவது? என வழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புலம்பெயர்ந்தோர் தொற்றுநோய் நெருக்கடியின் மத்தியில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க ஏதுவான கொள்ளைகளை அரசு வகுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.