கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய மாதிரிக் கணிப்பீட்டில் கனடா முழுவதும் ஜனவரி 24-ஆம் திகதிக்குள் மொத்தம் 796,630 கோவிட் -19 தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் கொரோனா மரணங்களும் 19,630 -ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனேடியர்கள் கொரோனா சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதே தொற்று நோயாளர்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.
தொற்று நோய் கட்டுப்பாடுகளை மீறிய நாடுகளில் மருத்துவமனைகள் நோயாளர் பராமரிப்புத் திறனை இழந்துள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலை கனடாவில் ஏற்படுவதைத் தவிர்க்க தயவுசெய்து பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் எனவும் பிரதமர் ட்ரூடோ கனேடியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பேணாவிட்டால் தொற்று நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.
தினசரி தொற்று நோயாளர் தொகையில் இன்னும் நாங்கள் சரிவைக் காணவில்லை. நாடு முழுவதும் கடந்த ஒக்டோபர் முதல் தொற்று நோய் அதிகரித்தே பதிவாகிறது எனவும் அவர் கூறினார்.
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனேடியர்கள் சோர்வாக இருப்பதை நாங்கள் அறிவோம். நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாங்கள் போராடுகிறோம். எனினும் அடுத்து வரும் மாதங்கள் குளிர் கால நிலை நீடிக்கும் என்பதால் எங்களுக்கு மேலும் சவால்கள் காத்திருக்கின்றன எனவும் டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.