இந்த ஆண்டு மே மாதம் 15ம் திகதி கனடா ஸ்கார்பாரோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான கண்காணிப்பு வீடியோவை பொலிஸார் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபராக தமிழ் இளைஞன் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

24 வயது நிரம்பிய டிலுக்சன் ராஜ்குமார் என்பவரையே தேடுவதாக ரொரன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கெனடி மற்றும் எல்லெஸ்மியர் வீதிகள் பகுதியில் ஒரு எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு கடந்த மே மாதம் நடந்து அதிகாலை 1:18 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
எரிவாயு நிலையத்தில் 48 வயது நபர் ஒருவர் தனது காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சிறிய ட்ரக்கில் வந்த இருவர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பொலிசார் நேற்று(11) வெளியிட்ட துப்பாக்கிச் சூட்டின் கண்காணிப்பு வீடியோவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வாகனத்தின் பின்புறம் மற்றும் ஓட்டுநரின் பக்க ஜன்னலையும் உடைப்பதாகத் தெரிகிறது. எனினும், துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான நபர் காயமடையவில்லை. ஆனாலும் பலதரப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 24 வயதான கனடா ரொரன்ரோவில் வசிக்கும் டிலுக்சன் ராஜ்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இவர் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 104 கிலோ எடையுடைவர், கறுத்த சுருட்டை முடியுடையவர், அடர்த்தியான தாடி வளர்த்திருப்பவர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியதோடு, இவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் உடனே 416-808-2510 என்ற பொலிஸாரின் இலக்கத்திற்கு அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர் மீது பலவகையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.