கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அத்துடன், கனடாவில் தொடர்ந்து தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நாட்டில் 100,000 -க்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
சஸ்காட்செவன் மாகாணத்தில் சனிக்கிழமை 252 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், கனடாவில் மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 500,242 ஆக உயர்ந்தது.
கியூபெக் மாகாணத்தில் மிக அதிகபட்ச ஒரு நாள் தொகையாக சனிக்கிழமை 2,038 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன் மாகாணத்தில் 44 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாயின.
அத்துடன், ஒன்ராறியோ மாகாணத்தில் சனிக்கிழமை 2,300 க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். இங்கு நேற்று 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
கனடாவில் கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை உச்சக் கட்டத்தில் உள்ளது. தினசரி 6,500 –க்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தொற்று நோய் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பல மாகாணங்கள் சமூக முடக்கல் உள்ளிட்ட கோவிட்19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இறுக்கமாக்கியுள்ளன.
கனடாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டிசம்பர் 4-ஆம் திகதி 400,000 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டர். இந்நிலையில் இரு வாரங்களில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் பதிவாகி மொத்த எண்ணிக்கை 500,000-ஆக அதிகரித்துள்ளது.
கனடாவில் முதல் ஒரு இலட்சம் தொற்று நோயாளர்கள் 6 மாதங்களில் உறுதிப்படுத்தப்பட்டனர். ஒரு இலட்சத்தில் இருந்து தொற்று நோயாளர் தொகை 2 இலட்சமாக அதிகரிக்க 4 மாதங்கள் ஆனது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் மட்டும் ஒரு இலட்சம் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவில் கொரோனா மரணங்களும் வெகுவாக உயர்ந்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளன.
கனடாவில் தடுப்பூசி ஒன்று அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டக்கு வந்துள்ளபோதும் உடனடியாக இதனை பரந்தளவில் வழங்க முடியாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வரவுள்ள க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக் காலங்களில் கனேடியர்கள் கட்டுப்பாடுகளைப் பேணி கவனமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, கடந்த ஏழு நாட்களில் தினசரி சராசரியாக 6,650 க்கும் மேற்பட்ட தொற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம், விடுமுறை கூட்டங்களைத் தடுக்க நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். .
தொற்று நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 4 ஆயிரத்தக்கு மேற்பட்டவா்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 650 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா மரணங்கள் 115 ஆக அண்மை சில நாட்களில் பதிவாகி வருவதாகவும் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் குறிப்பிட்டார்.