மியான்மார் இராணுவத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கமான டாட்மேடவ், முகநூல் வரம்புகளை மீறிய குற்றச்சாட்டில் முடக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூச்சி யின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்த நாட்டின் இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன் புதிய அரசை ஏற்கவும் மறுத்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த முதலாம் திகதி சூச்சி தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்ததும் அகற்றியது.
இதையடுத்து, மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் இடம்பெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில், மியன்மார் இராணுவத்தின் அதிகாரபூர்வமான முகநூல் பக்கமான டாட்மேடவ், முகநூல் வரம்புகளை மீறியதாக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை முகநூல் வரம்புகளை குறித்த பக்கம் மீறியது எனவும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகவே தற்போது முடக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.