50 பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 62 பேருடன் நேற்று சனிக்கிழமை காணாமல் போன இந்தோனேசியாவின் போயிங்-737 மக்ஸ் ரக பயணிகள் விழுந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக இந்தோனேசிய கடற்படை இன்று அறிவித்துள்ளது.
விமானப் பயணிகளினது என நம்பப்படும் சிதைத்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தின் சிதைவுகள் மற்றும் அதில் பயணம் செய்தவர்களது என நம்பப்படும் உடைகளின் பாகங்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவிலிருந்து நேற்று சனிக்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களிலே போயிங் 737 பயணிகள் விமானம் மாயமானது. அந்த விமானத்துடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து அந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் விமானம் விழுந்த இடத்தைக் கண்டறிந்துள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த சுழியோடிகளுடன் 10-க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
காணாமல் போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் 7 பேர் சிறுவர்கள், 3 பேர் குழந்தைகள் என இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தோனேசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்தக்குள்ளாகியதில் 189 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.