‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது தந்தை உயிரிழந்திருக்கும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடு செய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக் கொள்வேன். உங்களைப்போல யாரும் என்னை நேசிக்க முடியாது. உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. மன்னிக்கவும்.
எல்லாம் சரியாகிவிடும் என்று நீங்கள் என்னிடம் சொன்னதை இந்த விஷயத்திலும் நான் எடுத்துக் கொள்கிறேன். நான் உங்களால் தான் சுதந்திரமாகவும், உறுதியாகவும் இருந்தேன். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்று உங்களுக்குத் தெரியும்.
என்னை முழுமையாக நம்பி இருந்தீர்கள். உங்களுடைய விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன். வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடின உழைப்பாளியான உங்களை கடவுள் விரும்பி எடுத்துக் கொண்டார்.
எப்போதும் எங்களைச் சுற்றித் தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். எங்களால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்” இவ்வாறு நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். அவரைப் பின் தொடரும் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.