அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கடுமையான மோதல் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்திற்குள் ஒரு பாரிய போராட்டம் இடம்பெறுகிறது என்பது உண்மைதான் என்று அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாப்பதற்காகவும், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், 69 லட்சம் வாக்குகளில் அபிலாஷைகளையும் பாதுகாப்பதற்காகவே போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், அரசாங்கத்துடன் இணைந்த 12 கட்சிகளின் தலைவர்கள் கடந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் கொழும்பில் சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இரண்டாவது கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நானாயக்கார, டியூ குணசேகர, நிபுணர் டாக்டர் ஜி. வீரசிங்க, டிரான் அலெஸ், அதாவுல்லா, வீரசுமன வீரசிங்க மற்றும் அதுரலிய ரத்தன தேரர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
வாழ்க்கைச் சுமை மற்றும் மாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரே கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களை நிறுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் சுமை குறித்த கலந்துரையாடலின் போது, கட்சித் தலைவர்கள் அனைவரும், மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மூன்று வேட்பாளர்களை நிறுத்தும் திட்டத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.