உலக நீதி அரங்கில் , இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான் என்றும் அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை எனவும் தமுகூ தலைவர் மனோகணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
மறைந்த மன்னார் ஆயர் குறித்து முகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அநுதாப செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன.
ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.
அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.
நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.
ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன் என கூறிய மனோகணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளையும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்..

