திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அதன் தலைவரான பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்த அறிக்கை கிடைக்க பெற்றவுடன் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கழிவு முகாமைத்துவத்தில் வெளி சுற்றுச்சூழல் காரணிகள் குறித்த அக்கறை இல்லாத காரணத்தினால் மக்களால் எதிர்ப்பு வெளியிடப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திண்மக்கழிவு முகாமைத்துவம் உலகின் பல நாடுகளுக்கும், இலங்கைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.
முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத திண்மக்கழிவுகள் காரணமாக சுற்றுச்சூழல், நீர் மாசடைதல் மற்றும் மண்ணில் பல்வேறு இரசாயனங்கள் சேர்தல் போன்ற பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூலை மாதம் 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.