வடக்கிலுள்ள 3 தீவுகளை, காற்றலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் இன்றைய தினம் முக்கிய சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதனூடாக அர்த்தப்புஷ்டியான அதிகாரப்பகிர்வு மற்றும் வடக்கு கிழக்குக்கான அபிவிருத்தி மீதான தமது நிலைப்பாட்டினை இந்தியா மீள வலியுறுத்தியுள்ளது.
இதன்போது அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
மாவை சேனாதிராஜாவுடன் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்திப்பு தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
அத்துடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தங்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தம்மிடம் கேட்டறிந்தாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதேநேரம், யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை குறித்து தாங்கள் ஆட்சேபித்த விடயங்கள் தொடர்பிலும் அவரிடம் எடுத்துரைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.